தலபெருமை:
விஜய நகர மன்னர்கள் காலத்தில் விவசாயம் செய்வதற்காக வீர
வன்னியர் பரம்பரையினர் காடு வெட்டும் போது மண்வெட்டியில் வெட்டுப்பட்ட
சுயம்பு லிங்கம்' தான் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர். இன்றும் கூட
வெட்டுப்பட்ட கீறலை சுயம்புலிங்கத்தில் பார்க்கலாம்.
இந்த கோயில் துவாபராயுகத்தில் தோன்றியதென்று
கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இத்தலத்திற்கு வந்து வழிபட்ட ராமருக்கு
ஞானத்தையும், அகத்தியருக்கு திருமணக்கோலத்தையும், பூஜைசெய்த ரிஷிகளுக்கு
நற்பலன்களையும், குக நமச்சிவாயருக்கு உணவளித்தும் அர்த்தநாரீஸ்வரர்
அருள்புரிந்துள்ளார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர்
வந்து ஈசனை வழிபட்டுள்ளனர்.
குக நமச்சிவாயர்: குரு நமச்சிவாயரின் சீடரான குக
நமச்சிவாயர் திருவண்ணாமலையிலிருந்து பல தலங்களை தரிசித்து விட்டு இத்தலம்
வழியாக சிதம்பரம் செல்லும்போது பசி அதிகமானது. அவர் இங்குள்ள முத்தாம்பிகை
அம்மனிடம் சென்று, "தாயிருக்க பிள்ளை சோறு" என்ற செய்யுளை பாடினார்.
உடனே அம்மன் அவர் முன் தோன்றி "நான் இங்கு ஈசனுடன்
அர்த்தபாகம் பெற்றிருக்கிறேன். எனவே இருவரையும் சேர்த்து பாடுவாயாக" என்று
கூற குக நமசிவாயரும் அதன்படியே "மின்னும்படிவந்த சோறு கொண்டு வா" என்ற
பாடலைப்பாடினார்.
இந்த பாடலை கேட்டதும் முத்தாம்பிகையம்மன் பொற்கிண்ணத்தில் சோறு கொண்டு வந்து குகநமச்சிவாயரின் பசியாற்றினாள் என்பர்.
இக்கோயிலுக்கு தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள்
நடக்கிறது. சிவாலய திருப்பணிகளில் கலந்து கொள்பவர்கள் 27 அஸ்வமேத யாகம்
செய்த பலனைத்தரும் என்பது ஐதீகம்.
தல வரலாறு:
சிவபார்வதி திருமணம் கைலாயத்தில் நடந்த போது, தென்திசை
உயர்ந்து வட திசை தாழ்ந்தது. இதை சமன் செய்ய அகத்தியரை தென்திசை செல்ல
சிவன் உத்தரவிட்டார்.
சிவனின் கட்டளையை ஏற்ற அகத்தியர், பல தலங்களில் தங்கி
சிவபூஜை செய்து சென்றார். ஓரிடத்தில் சிவன் அகத்தியருக்கு திருமணக்காட்சி
தந்தார். இந்தக்காட்சி எந்நாளும் உலக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என
அகத்தியர் வேண்ட, "எனக்கு (லிங்கத்திற்கு) தேனபிஷேகம் செய்யும் காலத்தில்
இங்குள்ள லிங்கத்தில் பார்வதியும் இணைந்து தோன்றுவாள்," எனக் கூறி
மறைந்தார்.
பல ரிஷிகள் இங்கு வந்து தங்கி ஈசனை வழிபட்டதால் இத்தலம் ரிஷிவந்தியம்' என வழங்கப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
லிங்கத்திற்கு தேனபிஷேகம் செய்யும் போது, லிங்கத்தில் இடை நெளிந்த, கையில் கிளியுடன் இருக்கும் அம்மன் காட்சி தரும் அதிசயம்.